கட்டில் பேசுகிறது
கவர்ன்மெண்டு ஆஸ்பத்திரியில், அந்தக் கிழக்கு வார்டுப் படுக்கையில், எனது வியாதிக்கு என்னமோ ஒரு முழ நீள லத்தின் பெயர் கொடுத்து, என்னைக் கொண்டுபோய்க் கிடத்தினார்கள். எனது இரண்டு பக்கங்களிலும் என்னைப் போல் பல நோயாளிகள். முக்கலும் முனங்கலும் நரகத்தின் உதாரணம் மாதிரி. ஒவ்வொரு கட்டிலின் பக்கத்திலும் மருந்தையும் கஞ்சியையும் வைக்க ஒரு சிறு அலமாரி. கட்டில் கம்பியில், டாக்டரின் வெற்றி அல்லது வியாதியின் வெற்றி – இரண்டிலொன்றைக் காண்பிக்கும் ‘சார்ட்’ என்ற படம். ஹாலின் மத்தியில் ஒரு மின்சார விளக்கு; தூங்கும்பொழுது கண்களை உறுத்தாதபடி அதற்கு மங்கலான ஒரு ‘டோம்’. அதன்கீழ் வெள்ளை வர்ணம் பூசிய ஒரு மேஜை, நாற்காலி. அதில் வெள்ளுடை தரித்து, ‘ஆஸ்பத்திரி முக்கா’டிட்ட ஒரு நர்ஸ் என்னவோ எழுதிக்கொண்டிருக்கிறாள். ஒன்றையும் பற்றாமல் சலித்துக்கொண்டிருக்கும் மனம். ஐயோ! மறுபடியும் அந்த வயிற்றுவலி. குடலையே பிய்த்துக் கொண்டு வந்துவிடும் போலிருக்கிறதே! ஒரு கையால் வயிற்றை அமுக்கிக் கொண்டு ஒரு புறமாகத் திரும்பிப் படுத்தேன். சீ! ‘ஸ்பிரிங்’ கட்டிலாம்! என்னமாக உறுத்துகிறது! சற்று அயர்வு… என்ன வேடிக்கை! கட்டில் என்னுடன...