கைதிகள் ஜெயமோகன்
#கைதிகள் #ஜெயமோகன் #சிறுகதை
எட்டாவது குழுவில் முதலில் கண்விழித்தது நான். ஆகவே முதலில் நான்தான் செய்தியைத் தெரிந்துகொண்டேன். கரகரத்த குரலில் எங்கோ யாரிடமோ பேசிக்கொண்டிருப்பதை வயர்லெஸ் ரேடியோ சொல்லிக்கொண்டிருந்தது. குழூக்குறி என் மண்டைக்குள் சென்று தீண்ட ஒரு நிமிடம் ஆகியது.
‘…நரி மாட்டிக்கொண்டு விட்டது’
நான் பரபரப்புடன் ஓடிப்போய் தரையில் கம்பிளிக்குவியலுக்குள் படுத்திருந்த நாராயணனை ஓங்கி உதைத்தேன். ‘ஆ!’ என்று அலறியபடி அவன் கண்விழித்து எழுந்து அமர்ந்து மணல்பையைக் குத்துவது போலக் கைகளை ஆட்டியபடி ‘போ போ போ’ என்று கத்தினான். இந்த முகாமில் ஒவ்வொருவரும் பொந்துக்குள் அஞ்சி ஒடுங்கி ஒளிந்திருக்கும் காட்டுமிருகம் போலத்தான் இருக்கிறார்கள்.
’டேய்…நாந்தாண்டா..டேய் நாராயணா’
அவன் வாயைத் துடைத்துக்கொண்டு ‘’ஏண்டா?’ என்று சலித்தபின் மீண்டும் படுக்கப்போனான்.
‘டேய் அவன் மாட்டியாச்சுடா…’
‘யாரு?’ என்றான்.
‘உங்க அப்பன் தெரவியம்..டேய் அவன்…நரி’
நாராயணன் வாய் திறந்தபடி நின்றுவிட்டது. ‘எப்ப?’ என்றான்.
’தெரியல்லை. ராத்திரின்னு நெனைக்கறேன்..இப்பதான் மைக்ல கேட்டேன். யாரோ எங்கேயோ சொல்லிட்டிருக்காங்க’
நாராயணன் ’சும்மா எதையாவது கேட்டிருப்பே.அவன் அப்டி மாட்டிக்கமாட்டாண்டா…’ என்றான்
எரிச்சலுடன் ’போடா’ என்றபின் எனக்கே சந்தேகம் வந்தது. மீண்டும் வயர்லெஸ் அருகே சென்று அந்த ஒலியைக் கூட்டி வைத்தேன். பரபரப்பான பேச்சொலிகள் ஒரு நெடுஞ்சாலை ஊர்வலம் போல ஓடிக்கொண்டிருந்தன. அந்தப் பரபரப்பே அதற்கான ஆதாரம் என்று தோன்றியது. நாராயணனுக்கும் அதுவே தோன்றிருக்கலாம், அவன் எழுந்து லுங்கியைக் கட்டியபடி வந்து வயர்லெஸ் அருகே இரும்புநாற்காலியில் அமர்ந்துகொண்டான்.
சிலகணங்களில் அந்தச் சொற்கள் மீண்டும் வந்தன. ‘நரிகளைப் பற்றி டேவ் விசாரித்தார். அவர் நரியின் ஆரோக்கியம் பற்றி அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறார்…’
நாராயணன் பெருமூச்சுடன் ‘அதாண்டா, நூஸ் உண்மைதான்’ என்றான். மீண்டும் பெருமூச்சுவிட்டு ‘பாவண்டா’ என்றான்.
நான் அவனை பார்த்தேன். ‘பெருமாள எழுப்புடா…’ என்றான் நாராயணன்
நான் காம்ப் கட்டிலில் படுத்திருந்த பெருமாளைத் தோளைப்பிடித்து உசுப்பினேன். ரத்தம்போன்ற கண்களால் பார்த்து ‘ம்?’ என்றான்
‘அவன் மாட்டியாச்சுடா..மைக்ல சொல்றான்’ பெருமாள் ஒன்றுமே சொல்லாமல் எழுந்து லுங்கியைக் கட்டிக்கொண்டு வெளியே சென்று கூடாரத்துக்கு வெளியே நின்ற பெரிய கருவேலமரத்துக்கு அடியில் ஒன்றுக்கிருந்தான்.
‘இங்கதான் புடிச்சிருக்கானுக’ என்றான் நாராயணன். ’நேரா தர்மபுரிக்குக் கொண்டுபோய்ட்டிருக்காங்க. அங்க வெண்ணாம்பட்டி பங்களாவுக்குக் கொண்டு போவாங்கன்னு நெனைக்கறேன். கலெக்டரும் டிஎஸ்பியும் பாக்கணும்ல…’
பெருமாள் உள்ளே வந்து ‘எப்பல புடிச்சானுக?’ .
‘ராத்திரி’.
‘ஃபைட் உண்டோ?, எப்டியும் கன் வச்சிருப்பான்’ என்றான்.
‘தெரியல்ல…காயம்னு சொன்னாங்க…’ என்றேன்.
பெருமாள் சோம்பல் முறித்துக் கைகளை நீட்டி முதுகை நெளித்தான். ‘எளவெடுத்தவனுகள சுட்டுத்தள்ளினா நாம் நிம்மதியா வீடுகளுக்குப் போய்ப் பிள்ளைய மூஞ்சிகளப் பாக்கலாம். என்னெங்கியே?’ என்றான். நானே பலமுறை அந்த வார்த்தைகளைச் சொன்னவன்தான். ஆனால் அப்போது எனக்கு அது கசப்பை அளித்தது.
‘தேவசகாயம் வருவாரோ?’.
‘அனேகமா கெளம்பியிருப்பாரு…மத்தியான்னம் ரயிலு சேலத்துக்கு வந்திரும்…மூணுமணிக்கெல்லாம் அவரு நரியப் பாத்திருவாரு’
‘பாவம்டே’ என்றான் நாராயணன்.
‘என்னலே பாவம்? சும்மா கெடக்காம குண்டிக்கொளுப்பிலே சர்க்காருக்க மேலே துப்பாக்கி தூக்கினானுவள்ல? கண்ட புஸ்தகத்தையும் படிச்சுகிட்டு சூத்து எளகி சாடினா இந்த மட்டும் நடக்கும்…என்ன வெளையாட்டா? சர்க்காராக்கும்…பின்ன மயித்துகதுக்காடே சர்க்காரு தோக்கும் குந்தமுமா நம்மள மாதிரி லெச்சம்பேருக்கு சம்பளம் குடுத்து வச்சிருக்கு..? இல்ல கேக்கேன்’
நான் அவனிடம் விவாதிக்க விரும்பவில்லை. பெருமாள் எப்போதுமே முரட்டுத்தனமானவன். தன்னுடைய சாப்பாடு தூக்கம் வேலை சம்பளம் தவிர வேறு நினைப்பே இல்லாதவன். அவனிடம் வாங்கும் பீடிக்குக் கூட அவனிடம் கணக்கு இருக்கும். ‘இது நாலாவது பீடியாக்கும் கேட்டுக்க. சும்மா. ஒரு இதுக்காக சொன்னேன். தெரிஞ்சிருக்கணும்லா?’ என்பான். பெருமாள் தன் பெட்டியில் இருந்து ஒரு பீடிக்கட்டை எடுத்து ஒரு பீடியை உருவியபின் திரும்பப் பெட்டிக்குள் வைத்து மூடிவிட்டு அதைப் பற்றவைத்துக்கொண்டான்
நாராயணன் ‘நார் நாரா வகுந்திருவானுக நாயிங்க…அதுக்குன்னே சிலபேரு இருக்கானுக முருகேசா.. ரசிச்சு ரசிச்சு செய்வானுக பாத்துக்க. ஒருநாளைக்கு தேர்ட்கேம்புக்கு போறேன். ரெண்டு சின்ன பொண்ணுகளப் போட்டுக் கிளிக்கானுக. அதுக ரெண்டும் களுத்து வெட்டுத ஆடுகள மாதிரி கெடந்து கூவி விளிக்குதுக பாரு…எனக்கு மூத்திரம் வந்து நின்னுட்டுது. காலும் கையும் நடுங்குது. நேரா பாத்ரூமுக்குப் போய் வாந்தி எடுத்தேன்…’ என்றான்
‘செரி அத விடு’ என்றேன். என்னால் அந்த நினைப்புகளை அந்த நேரத்தில் நீட்டிக்க முடியவில்லை. ‘ரேடியோவப் போடுடே..பாட்ட கீட்டைக் கேப்போம்..’
’இப்பம் இங்க என்ன மயிரு பாட்டு கேக்குதது? கன்னடப்பாட்டு கிட்டினா யோகம்’ என்றான் பெருமாள். ரேடியோவை எடுத்து வைத்துக்கொண்டு அதை உருட்ட ஆரம்பித்தான். அது விதவிதமாக ஓசையிட்டு உளறி முனகி ஒரு கன்னடப்பாட்டின் நுனியைப் பற்றிக்கொண்டது. ராஜ்குமார் பாடிக்கொண்டிருந்தார்.
‘ராஜ்குமார் பாட்டுடா. வை’ என்றேன்.
’நம்ம பாட்டு மாதிரி இருக்கு’ என்றான் பெருமாள்.
’நம்ம பாட்டுதான்.. பாஷைதான் கன்னடம்’
பெருமாள் என்னைவிட முன்னதாகவே கர்நாடக எல்லைக்கு வந்துவிட்டவன், ஆனால் கன்னடம் சுத்தமாகப் புரியாது. முகாமிலேயே நான் ஒருவன் மட்டும்தான் கன்னடம் தெரிந்தவன்.
பெருமாள் எழுந்து தன் பெட்டிக்குள் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக, அதிகமாகப் போகாமல் பார்த்து ,கோபால் பல்பொடியைக் கையில் கொட்டிவிட்டு அந்தப் பொட்டலத்தைத் திரும்பப் பெட்டிக்குள் வைத்தான். மண்சட்டிச் சில்லு போல ஆகியிருந்த சிறிய லைபாய் சோப்புத்துண்டை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான். நான் நூதன் ஸ்டவ்வைப் பற்றவைத்தேன். திரிகளில் இரண்டு இறங்கி இருந்தமையால் ஒருபக்கமாக சிவப்பாக எரிந்தது. துடைப்பக்குச்சியை எடுத்து ஒடித்து ஸ்டவ்வின் மண்ணெண்ணை டேங்கில் விட்டு எடுத்து அதைக் கொளுத்தித் தாழ்ந்திருந்த திரிகளைப் பற்றவைத்தேன். சுடர் மீது அலுமினியப் பாத்திரத்தை வைத்து மூன்று டம்ளர் தண்ணீரை விட்டேன். சுடர் நீலமாக ஆகிறதா என்று குனிந்து பார்த்தேன். பாத்திரத்தில் கரி படிந்திருந்தது.
’மாதையன் வாறப்ப ஒரு ஸ்டவ்வுத் திரிக்குச் சொல்லச் சொன்னேனே’ என்றான் நாராயணன்.
‘மறந்துடுது’ என்றேன்
’செரி, இனி என்ன ஒருவேளை நாளைக்கேகூட நம்மளத் திருப்பிக் கூப்பிட்டாலும் ஆச்சு’ என்றான் அவன்.
’ஆனா காம்பு கொஞ்சநாள் இருக்குமுன்னு நினைக்கிறேன். அவனுக ஆளுங்க இன்னும் சிலபேரு இருப்பாங்கள்ல?’
‘எங்க? இந்த மீனு சிக்கினா அப்டியே செதைஞ்சிருவாங்க’
‘பழிக்குப்பழின்னு என்னமாம் ஆரம்பிப்பானுகளா? இவன் அவனுகளுக்க மாநிலக்கமிட்டி உறுப்பினராக்குமே’.
‘தெரியலை…அதுக்கெல்லாம் அவனுகளுக்கு சக்தி இருக்காது. இப்பமே வெதைய உடைச்சாச்சு…’ என்றான் . ஆனால் அவன் அமைதியானதைப்பார்த்தால் அவன் அதைப்பற்றித்தான் நினைக்கிறான் என்று தெரிந்தது.
’காப்பி போட்டச்சா?’ என்று பெருமாள் உள்ளே வந்தான். முகத்தை அவனுடைய சிவப்புத்துண்டை எடுத்துத் துடைத்துக்கொண்டு ‘ குளிரு நல்லா இருக்குடே..மணி என்ன ஆச்சு இப்ப?’ என்றான்
‘ஆறு’ என்றேன். அவனுடைய நாகர்கோயில் பக்கம் டீயையும் காப்பி என்றே சொல்வார்கள். பால்பௌடர் டப்பாவில் இருந்து இரண்டு ஸ்பூன் அள்ளி சின்ன டம்ளரில் போட்டுக் கொஞ்சமாகத் தண்ணீர் ஊற்றிப் பசையாக ஆக்கியபின் அதனுடன் டீயைக் கலந்தேன். பெருமாள் அவனே ஒரு டம்ளரை எடுத்துக்கொண்டான்.
நாராயணன் கைகளைத் தூக்கி சோம்பல் முறித்து ‘வாய் கழுவலைடா மச்சான்’ என்றான்.
‘அதை இப்ப சொல்லு…ஸ்டவ்வ அணைச்சாச்சு. டீ ஆறினா சூடுபண்ண முடியாது’ என்றேன்
நாராயணன் வெளியே போய் அதேவேகத்தில் கழுவிவிட்டு வந்து கோப்பையை எடுத்துக்கொண்டான். மூவரும் அவரவர் சிந்தனைகளில் மூழ்கி டீயை உறிஞ்சிக்கொண்டிருந்தோம். வயர்லெஸ்ஸில் ஏதேதோ குரல்கள். மேலும்மேலும் பரபரப்பு ஓடிக்கொண்டிருந்தது. ’கிண்டிக் கெளங்குகள எடுத்துப்போடுவானுகள்லா’ என்றான் பெருமாள். அவன் அதைப்பற்றித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறான் என எனக்குத் தெரிந்திருந்தது.
நான் ‘இவன இன்னும் போட்டு அடிச்சு என்ன செய்ய? இதுக்குமேலே யாரையும் பிடிக்கவேண்டியதில்லைன்னுதானே சொன்னாங்க’ என்றேன்.
‘வடக்க பெரியதலைகளை எல்லாம் பிடிச்சாச்சு… இங்க கோதண்டராமனைப் பிடிச்சாச்சு… கிளைமாக்ஸ் முடிஞ்சாச்சுடா’
‘ஆந்திராவிலெ இன்னும் இருக்கானுக. கொண்டப்பள்ளி சீதாராமையா காட்டுக்குள்ளதான் இருக்கான். கம்மம் பக்கமா நல்ல டீம் சேந்திருக்குன்னு சொல்லுதானுக, கணக்குக்குத் துப்பாக்கியும் வச்சிருக்கானாம்’ என்றான் பெருமாள்
‘அதைப்பத்தி இவனுக்கெல்லாம் ஒண்ணுமே தெரிஞ்சிருக்காது. தெரிஞ்சாலும் அது பெரிசா ஒண்ணும் இருக்காது. சும்மா போட்டு அடிச்சு சந்தோசப்படலாம்’ என்றேன்.’
‘இல்லடா, இவங்க தர்மபுரிய தேர்ந்தெடுத்ததே ஆந்திராவுக்கும் கர்நாடகாவுக்கும் பார்டரிலே இருக்குங்கிறதனாலத்தான். இங்க நடந்தது முழுக்க ஆந்திராவிலே இருந்து வந்ததுதான்..’
‘என்ன எளவோ’ என்றேன் சலிப்புடன்
’கொட்டைய ஒடைக்கணும் நாயிங்களை’ என்றான் பெருமாள்.
‘டேய் நீ இங்க இரு.. நாங்க ஓடைப்பக்கம் போயிட்டு வாறம்’ என்றேன்.
‘ஒடனே வரணும்…நானும் முட்டிக்கிட்டுதான் இருக்கேன். அங்க நிண்ணு கதைபேசப்படாது’ என்றான் பெருமாள். ’மணி ஏளாச்சு, இன்னும் இங்க விடியல்லை.நாறச்சனி பிடிச்ச காடு. நாசமாபோறதுக்கு’
பெருமாள் வசைபாட ஆரம்பித்தால் அதன்பின் வெகுநேரம் ஓயமாட்டான். இங்கே முகாம்களில் மனம் நிலையாக இருக்கும் போலீஸ்காரர்கள் சிலர்தான். பல முகாம்களில் பயங்கரமான சண்டைகள் வெடிக்கும். அடிதடியில் ரத்தம் கொட்டும், எலும்புகள் முறியும். இரண்டு வருடங்களில் எட்டு முறை கொலை நடந்திருக்கிறது. ஏழு கொலை துப்பாக்கியால் சுட்டுத்தான். எல்லாம் நக்சலைட் கணக்கில் ஏறிவிடும்.
ஒகேனேக்கல் பகுதிக்காடுகளில் பெரும்பாலும் அடர்த்தியான முட்புதர்கள்தான். மலைச்சரிவெல்லாம் கருவேலமரங்கள் பச்சைக்குடைகள் போல பரவி நின்றிருக்க தரைமுழுக்க சீமைக்கருவேலம் அலுமினியமுட்களுடன் பின்னிப்பிணைந்து படர்ந்திருக்கும். சில இடங்களில் மெல்ல முறுங்கிய பெரும் பட்டை இலைகளை விரித்து நிற்கும் சாம்பல்பூத்த பேய்க்கற்றாழைகள் கெட்டகனவில் வரும் ராட்சதப்பூக்கள் மாதிரி மலர்ந்திருக்கும்.
மலைச்சரிவுகளில் பன்றிகளால் பட்டை சிதைக்கப்பட்ட பழமையான வேங்கைமரங்கள். பெரும்பாலான மரங்களுக்குப் பெயர் தெரியாது. எல்லா மரங்களுக்கும் இலைகள் புளியமர இலைகள் அளவுக்கு சிறியவை. எனவே காட்டுக்குள் சருகுகளே கிடையாது. கூழாங்கற்களும் செம்மண்ணும் கலந்த வெந்து வறண்ட மண்தான் எங்கும் விரிந்து விரிந்து கிடக்கும். இங்கே முள் இல்லாத மரங்களைப் பார்ப்பதே அரிது. மொத்தக்காட்டிலும் இலைகளை விட முட்களே அதிகம் என்று எனக்கு ஒருமுறை தோன்றியது
மலைகளின் நடுவே ஆழமான இடுக்குகளில் சன்னமாக வழிந்தோடும் ஓடைகள்தான் காட்டின் ஒரே நீராதாரம். மலைச்சரிவில் கூடாரமடித்திருக்கும் எங்களுக்கும் இந்தக்காட்டின் பிரதான மிருகமான காட்டுப் பன்றிகளுக்கும், மிகத்தற்செயலாகக் கண்ணில்படும் கேழைமான்களுக்கும், மலையிறங்கி வந்து திரும்பி மலைக்குச் சென்றுவிடும் செந்நாய்களுக்கும், எப்போதாவது அவ்வழியாகக் கடந்துசெல்லும் வறண்டு ஒடுங்கிய சிறிய யானைக்கூட்டங்களுக்கும் எல்லாம் அதுவே குடிநீர். நாங்கள் தண்ணீரை அள்ளிக் கொண்டுவந்து மணல் பெட்டியால் வடிகட்டி நன்றாகக் காய்ச்சிக் குடிப்போம்.
பிளாஸ்டிக் குடங்களுடன் நானும் கையில் ரைஃபிளுடன் நாராயணனும் மலை இறங்கிச் சென்றோம். முள்ளை வெட்டி ஒதுக்கி நாங்கள் உருவாக்கிய வழி தவிர வேறு வழியில் நடமாடவே முடியாதென்பதனால் இந்தக் காட்டில் வழிதவறுவதென்ற பேச்சுக்கே இடமில்லை. பூட்ஸ் அணியாமல் காட்டில் எங்கும் நடக்க முடியாது. தரையில் கிடக்கும் முட்களின் பூசணம் மிக அபாயகரமான விஷம். மரத்தில் நிற்கும் நுனிசிவந்த முள் குத்தினால் ரத்தக் காயத்தோடு சரி.
மலைப்பிளவுக்குள் கரும்பாறையின் வெடிப்பு வழியாக நீர் சன்னமாகக் கொட்டும் ஒலி கேட்டது. கரிய பாறைப்பிளவைப் பார்க்கையில் அதைப் பெண்யானையின் பின்பக்கம் என்று நினைப்பதை என்னால் தடுக்க முடியாது. ’ஆனைமூத்திரத்தை நம்பி கெட்டுச்சோத்த அவுத்துட்டேம்ல’ என்று பெருமாள் சொன்ன பழமொழியும் நினைவுக்கு வரும். மலையின் மிக அந்தரங்கமான ஓர் இடம் அது. மேலே மலையின் எந்த சரிவிலிருந்து பார்த்தாலும் அதைக் கண்டுபிடிக்க முடியாது. எங்கள் முகாம் அமைந்திருப்பதே அந்த ஊற்றைக் கண்காணிப்பதற்காகத்தான்.
ஓடையின் இருபக்கமும் ஈரமான செம்மண்ணில் பன்றிகளின் கூர்மையான குளம்புகள் நிறைந்திருந்தன. சில மான்சுவடுகளையும் கண்டேன். அங்கே வந்த ஒன்பது மாதங்களில் ஒரே ஒருமுறை சிறுத்தையின் காலடியைக் கண்டிருக்கிறேன். கருவேலங்குச்சியைக் கத்தியால் வெட்டிப் பல் தேய்த்துக்கொண்டு காட்டுக்குள் அமர்ந்துகொண்டோம். தூரத்தில் நாராயணன் தலை தெரிந்தது. ‘என்ன பண்ணுவாங்கன்னு நெனைக்கறே?’ என்றேன்.
‘முடிச்சிருவாங்க…விட்டு வச்சா வம்புல்லா?’ என்றான் நாராயணன்.
‘கொல்லுற அளவுக்கு என்னடா பண்ணினான்?’ என்றேன்.
‘அவன்மேல எட்டு கொலை வழக்கு இருக்கு’
‘அதெல்லாம் சும்மான்னு உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும்’
நாராயணன் துப்பிவிட்டு ‘அப்டிப்பாத்தா செயிலுக்கு போறவன், தூக்குல தொங்குறவன்ல நாலிலே ஒருத்தன் ஒண்ணும்தெரியாதவனாக்கும். அதை நினைச்சா நீ தொப்பிய களட்டிட்டு ஊருக்குப் போயி வெள்ளாமைய பாக்கணும், நான் ஆலமரத்தடியிலே ஒக்காந்து கண்டவனுக்க அக்குள வழிக்கணும்’ என்றான்.
நான் பெருமூச்சு விட்டேன். ‘என்ன இருந்தாலும் கொல்லுறது தப்பாக்கும்’ என்றேன்.
’தப்பும் சரியும் பாக்கறவன் என்ன மயுத்துக்கு தொப்பிபோடவந்தே? வக்காளி, உனக்கெல்லாம் சர்க்காரு மாசாமாசம் குடுக்குத சம்பளம் தெண்டம்’ .
ஒரு காற்று முட்கள் வழியாகச் சென்றது. மெல்லிய துணி ஒன்று முட்களால் கிழிபடும் ஒலி கேட்டது. அது மலை மெல்ல பெருமூச்சுவிடும் சத்தம் என்று எண்ணிக்கொண்டேன்.
‘சாவுறதுக்காகத்தானே அவனுக எறங்கினானுக…விடு’ என்றான் நாராயணன்.
இதையெல்லாம் ஏன் பேசிக்கொள்கிறோம் என்ற எண்ணம் ஏற்பட்டது. பேசிப்பேசி எல்லாவற்றையும் கொஞ்சம் இலகுவாக ஆக்கிக்கொள்கிறோமா? நான் கீழே சென்று கழுவிக்கொண்டேன். மேலேறும்போது நாராயணன் கழுவிக்கொள்ள இறங்கினான்.
நான் மேலே நின்றபடி ‘படிச்ச பையன்ல?’ என்றேன்.
‘படிப்பாக்குமே கெடுக்குறது’ என்று சொல்லி நாராயணன் எழுந்து மேலே வந்தான்.
நான் சட்டையையும் லுங்கியையும் கழட்டிவிட்டுத் துண்டைக் கட்டிக்கொண்டு நீரில் இறங்கினேன். கரையில் நாராயணன் நின்றுகொண்டான். ரைஃபிளை மடியில் வைத்துக்கொண்டான்
குடத்தில் நீரை அள்ளித் தலையில் விட்டுக்கொண்டேன். நீர் குளிர்ந்து விரைக்கச்செய்யும்படி இருந்தது. உதடுகள் நடுங்க ஆரம்பித்தன. இந்த நீரில் சோப்பு நன்றாக நுரைக்காது. மீண்டும் நீரை விட்டுக்கொள்ளும்போது எனக்கு அவன் பெயர் நினைவுக்கு வந்தது. நரி என்றுதான் பல மாதங்களாகச் சொல்லி , நினைத்து வருகிறோம். பெயர் மறந்துவிட்டது. ’அப்பு’ இந்தப்பக்கம் அப்படி பெயர்கள் பொதுவாகக் கிடையாது. மாது, ராசு என்றுதான் இருக்கும்.
நான் நாராயணனிடம் ‘அவன் பேரு என்ன சொல்லு பாப்பம்’ .
‘சுப்பு இல்ல?’
நான் சிரித்து ‘நல்ல போலீஸு வேலை. டேய், அவன் பேரு அப்பு’ என்றேன்.
‘பேர எங்க சொல்றது?’ என்றான் நாராயணன். ‘படிச்சிருக்கான்லே…பேசாம எங்கயாம் போயி ஒரு வாத்தியார் வேலைய பாத்துட்டு, ஒரு நல்ல குட்டியக் கெட்டிகிட்டு இருந்திரலாம்ணு தோணியிருக்கா பாரு’ என்றான்
‘இவன் பெரிய பகத்சிங்குல்ல…மீசையக்கூட அப்டித்தான் வச்சிருப்பானாம்…’ என்றேன்
நான் குடத்தில் நீர் அள்ளிக்கொண்டு காவடிபோல மூங்கிலில் மாட்டி இரு தோளிலும் எடுத்துக்கொண்டு மேலேறினேன்.
நாராயணன் என் பின்னால் வந்தான். ‘இந்த நாசமாப்போன ஊரிலே இவனுக இப்டி கெளம்பலைன்னாத்தான் ஆச்சரியம். பாத்தியா, ஒருத்தனுக்காவது சோறுதிங்குற களை இருக்கான்னு. பேய்கள மாதிரி இருக்கானுக. இந்த முள்ளுக்காட்டிலே எதை நம்பி உயிரோட இருக்கானுகன்னே தெரியல்லை…’ என்றான். நான் மூச்சு இறுக எடை சுமந்ததனால் பதில் சொல்லவில்லை
‘இதில அடிமைத்தனம் வேற. பெண்ணாகரத்திலே ஒருத்தன் இருக்கான். என்னமோ ஒரு நாயுடு. எழுநூறு ஏக்கர் நெலம் வச்சிருக்கானாம். அவன் பண்ணையில மட்டும் நாநூறுபேர் வேலைபாக்கானுக. சம்பளம் கூலின்னு ஒண்ணும் கெடையாது. மத்தியான்னம் கேப்பக்களியும் கொழம்பும் உண்டு. வெலமுடிஞ்சு போறப்ப கேப்பையோ சோளமோ அப்ப எது தோணுதோ அது கொஞ்சம் குடுப்பாங்க. சிலசமயம் புளியங்கொட்டை. அதை வறுத்து ஊறவச்சுத் திங்கானுக. அதுக்கு மொதலாளி மொதலாளின்னு அவன் பண்ணையிலே போயிக் காவல் கெடக்கானுக. அந்தாளு எட்டு குதிர வச்சிருக்கான். நல்ல அசல் குதிர. மாந்தளிர் நெறம். பளபளன்னு அது நிக்கிறதப் பாத்தாலே அழகா இருக்கும். அதிலே ஏறி அவன் போறதப்பாத்தா மகாராஜா கெட்டான்’
‘ஏ, அங்க என்னடே செய்தீய?’ என்று மேலே பெருமாள் குரல் கேட்டது.
‘இவன் ஒருத்தன் மாக்கான்’ என்றான் நாராயணன். ‘ஒரு விவரமோ முறையோ இல்ல’
நான் ‘அவன் கஷ்டப்பட்டு மேல வந்தவன்டா’ என்றேன்.
‘மேல எங்க ? இப்டிக் காட்டுல துப்பாக்கியோட நிக்குறதுக்கா?’ என்றான் நாராயணன்.
‘அந்த அன்னக்காவடிங்கள மாதிரி கம்புக்கும் சோளத்துக்கும் அடிம வேல பாக்கறதவிட இது மேலத்தானே? எங்க அப்பாவும் பண்ணைக்கூலியா வேலை பாத்தவருதான்..இப்பதான் ரெண்டேக்கர் குத்தகைக்கு எடுத்துக் குடுத்திருக்கேன்’
‘கரும்பா?’
‘கொஞ்சம் நெல்லு…மிச்சத்துக்குக் கரும்பு’ ‘
’இந்தப் பண்ணையாரு நாயிடு போனவருசம் ஒரு பொம்புளயக் கொதிக்கிற வெல்லப்பாகிலே போட்டுட்டான் தெரியுமா?’
‘அய்யோ’ என்று நின்றுவிட்டேன்.
‘கரும்பு காய்ச்சுற ஆளோட பொஞ்சாதிதான். அவன் காய்ச்சிட்டு இருக்கிறப்ப இவ அவன் ஒண்ணுக்குப் போன நேரமா பாத்து கஞ்சிச் சட்டியிலே வெல்லப்பாக அள்ளியிருக்கா. பண்ணை பாத்துட்டு வந்திருக்கான். ஏற்கனவே அவனுக்கு சந்தேகம் இருந்திருக்கு. நேரா வந்தவன் ‘தேவ்டியா நாயே’ன்னு கத்திட்டு ஓடிவந்து எட்டி ஒரு ஒதை விட்டிருக்கான். அப்டியே உள்ள விழுந்திட்டா…
எனக்கு மூச்சு கெட்டியாக உள்ளேயே இருந்தது. அந்த மேடு செங்குத்தானது.
‘எடுத்துப் போட்டிருக்கிறத நான் பாத்தேன். தீயிலே வாட்டின கோளி மாதிரி உருகி உடைஞ்சு கெடக்கா. தூக்கி மண்ணிலே போட்டிருக்கானுக. முகம் முலை கையி காலுண்ணு ஒண்ணும் இல்ல… மொத்தமா கொழமொழன்னு ஆயாச்சு. ஆனா எங்கியோ உசிர் இருக்கு. ‘சக்கர சக்கரன்னு’ சத்தம் போட்டுட்டு தலைய ஆட்டுறா. அவளோட பையனுக்கு செல்லப்பேரு சக்கரையாம். அவ புருஷன் கையெல்லாம் வெல்லப்பாகுபட்டு வெந்து அந்தப்பக்கம் கெடக்கிறான். அவன் தான் ஓடிவந்து தூக்கினானாம்
‘அப்றம்?’ .
‘என்ன, கொஞ்ச நேரத்திலே செத்துட்டா. கேஸும் கெடையாது ஒண்ணும் கெடையாது. இன்ஸ்பெக்டரய்யாவுக்கும் ஸ்டேஷனுக்கும் சில்லறை விழுந்திருக்கும், வேற என்ன? அந்த ஆளுங்கதான் நடந்தத சொன்னாங்க…ஏழெட்டுபேர் பாத்திருக்காங்க உதைக்கிறத. எங்கிட்டு போயி சொல்றது? ‘சாமி சோறு இருக்கறவனுக்குதானே நாயம்’னு சொல்லுறான். சரிதானே? உனக்கும் எனக்கும் என்ன நியாயம் இருக்கு? மேல உள்ளவன் நக்கச்சொன்னா ‘சார் இம்பிடு சக்கர கெடைக்குமா’ன்னு கேக்கணும் நாம…’ நாராயணன் சொன்னான். ‘டேய் அவ விழுந்த அந்த சக்கரப்பாகைக்கூட வீணாக்காம வெல்லமாக்கிட்டானாம். அதை எவனோ சாமிக்குப் பாயசமா பொங்கிப் படையல் போட்டிருப்பான். சாமியும் கண்ணமூடிட்டு அருள் புரிஞ்சிருக்கும்…என்ன சொல்லுறே?’
பெருமாள் அவனே பாய்ந்து கீழே வந்து துப்பாக்கியை வாங்கிக்கொண்டு கீழே சென்றான். நான் தண்ணீரை இறக்கி வைத்தேன். சப்பாத்தி மாவை எடுத்துப் பிசைய ஆரம்பித்தேன். நாலைந்து உருளைக்கிழங்கும் வெங்காயமும் இருந்தன. மாவை ஊறவைத்துவிட்டு வெங்காயத்தை நறுக்கினேன்.
நாராயணன் கட்டிலில் அமர்ந்துகொண்டான். ‘காலாகாலமா இப்டித்தான் இருக்கானுக. மானம் மரியாத ஈன ரோஷம் ஒண்ணும் இவனுகளுக்கு இல்ல. அந்த செத்துப்போன குட்டியக்கூடப் பண்ணைதான் கொஞ்சநாள் வச்சிருந்தானாம். பிறகுதான் இவனுக்குக் கட்டி வச்சிருக்கான். என்னத்தச் சொல்ல?’
‘நம்மூரிலயும் எல்லாம் இருவத்தஞ்சு வருசம் முன்னாடி இதே கதைதானே… ’ என்றேன். சப்பாத்தியைப் பரப்ப நாராயணன் உதவிசெய்தான். அதன்பின் அவன் மேலே பேசாமல் தனக்குள் ஆழ்ந்துவிட்டான். நான் விறகடுப்பைப் பொருத்தி சின்னத் தாளால் வீசி வீசி எரியச்செய்தேன். உருளைக்கிழங்கைக் கம்பியில் குத்தித் தீயில் சுட்டேன். தோல் வெந்த கிழங்கு சட்டென்று ஒரு அதிர்ச்சியை அளித்தது. அதைத் தொட முடியவில்லை. அப்படியே நீரில் முக்கி கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தேன். பின் தோலை வழித்துவிட்டு அதை நசுக்கி மாவாக்கினேன்.
‘முருகேசு’ என்றான் நாராயணன் ‘ஒருவேள இவனும் பகத்சிங்கு மாதிரித்தானோ. நாம என்னத்தைக் கண்டோம்?’
வெங்காயத்தையும் நசுக்கிய உருளைக்கிழங்கையும் உப்பு பச்சைமிளகாயுடன் வாணலியில் போட்டு நன்றாகக் கடைந்து சூடாக்கி வேக விட்டேன். அதன்மீது கொஞ்சம் கடுகு தாளித்துக்கொட்டி இறக்கி வைத்தபின் அந்தத் தீயைக் கனலாக்கி அதிலேயே சப்பாத்தியை வாட்டி எடுத்தேன். ஆளுக்கு ஆறு சப்பாத்தி வரைக்கும் சாப்பிடுவோம். ஆனால் எனக்கு சாப்பிடத்தோன்றவில்லை. நாராயணன் அவனுக்கும் இரண்டு போதும் என்று சொன்னான். பெருமாள் மட்டும்தான் வழக்கம்போலச் சாப்பிட்டான்.
நான் என் ரைஃபிளுடனும் வயர்லெஸ் கருவியுடனும் சென்று வழக்கமான பாறை உச்சியில் அமர்ந்துகொண்டேன். அங்கே ஒரு பெரிய புளியமரம் தனியாக நின்றது. அதன் கீழே தார்ப்பாயால் ஒரு சிறிய மறைப்பு. இருபதடி தூரத்தில் நின்றால்கூட பாறை என்றுதான் தோன்றும். அதன் நிழலில் அமர்ந்துகொண்டு கீழே விரிந்துகிடந்த காட்டைப் பார்த்தேன். பிரம்மாண்டமான பன்றிகள் கிடப்பதுபோல இருபது முப்பது மலைகள் அலையலையாக தூரத்து நீலமலையடுக்குகள் வரை தெரிந்தன. பன்றிகளின் உடலில் மயிர் போல உதிரி மரங்கள்.
அந்த நிலத்தை நான் அங்கே அமர்ந்து நாள் முழுக்கப் பார்க்க ஆரம்பித்து எட்டு மாதமாகிறது. அந்தக்காட்சியை வெறுமை என்ற ஒரே சொல்லில் சொல்லிவிடலாம். காடு என்று சொல்லும்போது நினைவுக்கு வரும் எதுவுமே இல்லை. ஓங்கிய மரங்கள், பசுமை, இருட்டு, ஈரம் ஒன்றும் இல்லை. பெரிய முள்வெளி. உயிரசைவே நிகழாமல் விரிந்து கிடக்கும் நிலம். காலையில் கொஞ்சம் பரவாயில்லாமல் இருக்கும். பத்துமணி வாக்கில் பனி விலகி வெற்று வானத்தில் இருந்து வெயில் கொட்ட ஆரம்பித்ததும் வெறுமை பெருகியபடியே செல்லும்.
மதியத்தில் வானும் பூமியும் சேர்ந்து உருகிக் கண்ணாடிக்குழம்பாகக் கண்கூச ஒளிவிட்டுக்கொண்டிருக்கும். பின்மதியத்தில் நிலம் வெந்த வாசனை காற்றில் எழுந்து வரும். மேமாதம் என்றால் எங்காவது தீப்பிடித்து எரிந்து எரிவாடையும் புகையும் சாம்பல்துகள்களும் காற்றிலேறி வரும். பாறைப்பரப்புகளின் மீது ஈரமாக கானல் அலைபாயும். மாலையில் மெல்ல மெல்ல வானம் சிவந்து பழுத்து தீக்கனல்வெளியாகும். தூரத்தில் மாதேஸ்வரன்மலையடுக்குகள் நீலநிறம் கொள்ளும். நீலம் மேலும் மேலும் அடர்ந்து வரும். காற்றில் குளிர் கலக்கும். பின்பக்கமிருந்து காட்டை நோக்கிப் பறவைக்கூட்டங்கள் பறக்கும் காகிதக்குப்பைகள் போல மிதந்து செல்லும். பின்பு தீனமான பறவைக்குரல்களினாலான அந்தி. இருள் பரவியதும் காட்டின் ரீங்காரம் ஆரம்பிக்கும். அந்த ஒலியே காடாக ஆகி இரவெல்லாம் இருளுக்குள் கூடவே இருக்கும்.
அன்று என்னால் அமர முடியவில்லை. நிலைகொள்ளாமையுடன் கற்களைப் பொறுக்கிப் பள்ளத்தில் வீசிக்கொண்டிருந்தேன். கற்கள் எங்கோ உருண்டு உருண்டு விழும் ஒலி. கொஞ்சநேரம் தூரநோக்கியால் பள்ளத்தாக்கை ஆராய்ந்தேன். என் பக்கவாட்டில் புதரில் இருந்து ஒரு கீரி சாம்பல்நிறமான வாலை விடைத்தபடி இன்னொரு புதருக்குள் ஓடி மறைந்தது. நான் என் சிந்தனைகளை கொஞ்சமும் கவனிக்காமல் இருக்கப் பழகிவிட்டேன். எனக்குள் ஒயர்லெஸ் ஒலிப்பது போல யாரோ யாரிடமோ என ஏதோ உரையாடல் ஓடிக்கொண்டிருக்கும், முற்றிலும் கவனிக்கப்படாமல்.
டப்டப்டப் என்று தூரத்தில் எஸ்டி பைக் ஒலித்தது. கருப்பையாசார் என்று அந்த ஒலி சொன்னது. ஆம், நான் அவரை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். ஏதோ நடக்கப்போகிறது என்று என்னுடைய உள்மனம் சொல்லிக்கொண்டிருந்தது. எழுந்து தூரநோக்கியால் பார்த்தேன். பைக் வளைவில் திரும்புவது தெரிந்தது. அதில் சீருடையும் கறுப்புக்கண்ணாடியுமாக கருப்பையா வந்துகொண்டிருந்தார். நீலப்புகை அவர் வந்த வழிகளில் தேங்கி நின்று நீரில் துப்பிய பற்பசைநுரை போல மெல்லப் பிரிந்தது.
நான் கூடார வாசலுக்குச் சென்றபோது கருப்பையா வந்து சேர்ந்திருந்தார். நாராயணனும் பெருமாளும் அவரை உள்ளே அழைத்துச்சென்றார்கள். மடியில் கிளிப் விடுவித்து வைத்திருந்த துப்பாக்கியைப் பூட்டி இடுப்பில் செருகியபின் அவர் கட்டிலில் அமர்ந்து கொண்டார். அவரது உடல் அளவுக்கு நாற்காலி போதாது.
நான் வாசலில் நின்றதும் ‘வாடா…எப்டிரா இருக்கே?’ என்றார்.
‘இருக்கேன் சார்’ என்றேன்.
கரிய முகத்தில் பெரிய வெண்ணிறப் பற்கள் தெரிய சிரித்து ‘நீ இருக்கேன்னு உன்னையப்பாத்தாலே தெரியுதுடா நாயே…’ என்றார்.
நான் நாற்காலியில் அமர்ந்துகொண்டேன். நூற்றுக்கணக்கான சிறு மருக்களும் பாலுண்ணிகளும் நிறைந்த கழுத்தும் முகமும், நெற்றியே இல்லாமல் நெருங்கி வந்த அடர்ந்த முள்ளம்பன்றி மயிரும் பரந்த மூக்கும் இருந்தாலும் கருப்பையா முகம் ஏதோ ஒரு களையைக் காட்டக்கூடியது. அவருக்கு நம்மை உண்மையிலேயே பிடிக்கும் என்பதனால் இருக்கலாம்.
‘டீ சாப்பிடுங்க சார்’ என்றேன்.
‘போடு’ என்றார்.
நாராயணன் ஸ்டவ்வை மூட்டி டீ போட ஆரம்பித்தான்.
‘என்னசார் செய்தி?’ என்றேன்.
‘வக்காளி, அப்ப நீ மைக்க கேக்கலியா?’
‘கேட்டேன்’
‘பின்ன?’
‘அதிலே மேக்கொண்டு என்ன?’
‘மேக்கொண்டு என்ன, பொலிதான்’
நான் பேசாமல் இருந்தேன்
‘என்ன?’
‘இல்ல சார்…’
‘என்ன இல்ல?டேய் அவனுக நம்மாளப் போட்டிருக்கானுகடா’
‘எத்தனை பேர சார்?’
‘ஏன் திருப்பத்தூரிலே வில்சனை குண்டுவீசி கொல்லலை?’
‘மொத்தம் இதுவரை மூணுபேரு…நாம இருபது முப்பதுபேர கொன்னாச்சே’
‘டேய் அந்தக்கணக்கப் போட்டிட்டிருந்தா வேலைக்காவாது. நாம அடிச்சாத்தான் நமக்கு அடிவிளாது, கேட்டியா?’
நான் ஒன்றும் சொல்லவில்லை. கருப்பையா மிக எளிமையான மனம் கொண்டவர். அவருக்கு என்ன சொல்லப்படுகிறதோ அதை முழுக்க நம்பி அதாகவே ஆகிவிடுபவர். அவரைப்போன்றவர்கள்தான் போலீஸுக்குத் தேவை போல.
’சண்டை உண்டா சார்?’ என்றான் பெருமாள்.
‘சண்டையெல்லாம் இல்லடா. அவனே வந்து சரண்டர் ஆயிட்டான்’
‘உண்மையா?’
’ஆமா…ஆனா சும்மா சரண்டர் ஆயிடுவானா? ஆக வச்சோம்ல? தாளிய தேட ஆரம்பிச்சு எட்டுமாசமாகுது. எப்டியும் முந்நூறுபேர இண்டராகேட் பண்ணியாச்சு. ஒருத்தன்கூட மூச்சு விடலை. டேவ் எங்கள போட்டு வையறார். காதுகுடுத்துக் கேக்கமுடியாது. என்ன பண்றது? இனிமே பண்றதுக்கு ஒண்ணுமில்ல… இந்த சனியனுங்களோட ஆசனவாயிலயும் பொச்சிலயும் போடுறதுக்கு வாங்கின மொளகாப்பொடிக்கு தனி பில்லு எளுதணும்னு மாதையன் அண்ணைக்கு சொல்லி ஒரே சிரிப்பு பாத்துக்க… அடி, ஒதை, கொல்லு, நகத்த பிடுங்கு, சுண்ணியிலே ஈக்குச்சிய விட்டு சொளட்டு . என்ன பண்ணினாலும் ஒரு வார்த்தை சொல்லமாட்டானுக. சில கல்லுளிப்பயக்க ‘சொல்ல மாட்டேன் சாமி. அவரு எங்க கொலதெய்வம் முனியப்பசாமியாக்கும்னு நம்மகிட்டயே சொல்றான்…’
பெருமாள் ‘திமிரு’ என்றான்.‘சர்க்காருண்ணாக்க வெளையாட்டா நினைச்சுக்கிட்டானுக’.
கருப்பையா ’அப்பதான் மெட்ராஸிலே இருந்து மோகன்ராஜ்சார் காம்புக்கு வந்தார். இப்டி ஒரு பேரு அவனுக்கு இருக்குன்னா அவனுக்கும் இதே மாதிரி ஒரு பிரியம் இவங்கமேலே இருக்கணும்டா…ஒரு வழி இருக்கு. அதுக்கு ஆப்பரேஷன் ஸ்மோக்குன்னு பேருன்னார். பாம்ப புடிக்கறதுக்கு இருளர் பயக்க பொந்திலே பொகை போடுவானுங்க இல்ல, அதே டெக்னிக்கு. நேரா நாலு நியூஸ் பயக்கள வரச்சொல்லி பேப்பரிலே தெனமும் வகை வகையா எளுதவச்சாரு. போலீஸ் கொடுமை, போலீஸ் சித்திரவதை. அப்புவத் தேடி போலீஸ் கிராமவாசிகளை அடிச்சு கொன்னிட்டிருக்காங்க… பொம்புளப்புள்ளைகளக் கொண்டு போயிக் கற்பழிக்கிறாங்க. பொச்சில ஆசிட்ட விடுறாங்க…தெனம் நியூஸுதான். பத்தே நாளு. நேரா வந்து நிக்கிறான்…’
‘எங்க?’
‘இங்க இல்ல. மாரண்டஹள்ளி ஸ்டேஷனிலே… சவத்துப்பய கொள்ளேகால், ராம்நகர் பக்கம் அலைஞ்சிட்டிருந்திருக்கான். நேத்து மத்தியான்னம் மூணு மூணரை மணிக்கு ஸ்டேஷனிலே ஒரு ஜோல்னாபையோட வந்து நின்னிட்டிருக்கான். நான்தான் அப்புன்னு சொன்னான். அங்க இருந்தது ராஜப்பாவும் முருகேசனும். அதான்யா மீசக்காரரு. அவருக்கு சந்தேகம். புடிச்சு வச்சுட்டுத் தகவல் குடுத்தாரு. கோபால் போயி பாத்ததும் தெரிஞ்சுட்டுது. எழுவத்தேழிலே அவனை இவுருதான் முதல்ல ஒரு சின்ன கேஸுக்கு இண்டராகேட் பண்ணியிருக்காரு… நான் சரண்டர் ஆயாச்சு. எங்க ஊர்க்காரங்கள விட்டிருங்க. அவங்கள ஒண்ணும் பண்ணாதீங்கன்னு சொன்னானாம். நேரா தர்மபுரிக்குக் கொண்டு போய்ட்டாங்க. அங்க டிஎஸ்பி வந்து பாத்தாரு. அவருகிட்டயும் அதைத்தான் சொல்லியிருக்கான். கலெக்டர் வந்து பாத்தப்பவும் அதேதான். வேற ஒண்ணுமே சொல்லலை. ‘உங்களுக்கு என்னைத்தானே வேணும். எங்க சனங்கள ஒண்ணும் பண்ணாதீங்க’ பாத்தியாடா திருட்டுநாயிக்கு அவன் சனங்க மேலே என்ன ஒரு இதுண்ணு? நம்ம தலைவனுங்க இருக்கானுங்களே’
‘டேவ் வந்தாச்சா?’ என்றான் நாராயணன்.
டீயை வாங்கி உறிஞ்சியபடி ‘அவரு சேலத்திலேதான் இருந்திருக்காரு. நேத்து சாயங்காலமே வந்தாச்சு. அவரு ஒரு நாலுமணிநேரம் இண்டராகேட் பண்ணியிருக்காரு. கொட்டைய உடைச்சாச்சு. ‘எங்காளுகள விட்டிருங்க…எனக்கு வேற ஒண்ணும் தெரியாது’ ரெண்டு வரிதான். விடியக்காலையிலே மோகன்ராஜ் சார் மெட்ராஸிலே இருந்து வந்திருக்காரு. அவரு ஒரு மணிநேரம் உக்காந்து பேசியிருக்காரு. வெளிய வந்து ‘வைப் அவுட் ஹிம்’னு சொல்லிட்டுக் காலையிலேயே சேலம் போயிட்டாரு.’
‘அப்ப அவ்ளவுதானா?’
‘பின்ன? டேய் இதோட இங்க இவனுகளுக்க கதை முடியுது. இன்னும் ஒரு ஏழெட்டுப் பேரு இருக்கானுக. லிஸ்டு போட்டாச்சுன்னு பேச்சு. இவன்கூட்டாளி பாலன்னு ஒருத்தன், அவன் ராயப்பேட்டையிலே இருக்கிறதா சொல்றாங்க. அவனை ஃபாலோ பண்ணிட்டிருக்காங்க. அப்டியே கொத்தா தூக்கிருவாங்க’ டம்ளரைத் திருப்பிக்கொடுத்துக் கருப்பையா மீசையை முறுக்கினார். ‘இங்க வந்து ஏற்பாடுகள் செய்றதுக்கு ஆர்டர் வந்திருக்குடா’
என் வயிறு தோல்பறைபோல அதிர்ந்தது. ‘இங்கியா?’
‘பின்ன? நம்ம டிஸ்டிரிக்டிலே வேற எங்க இந்த மாதிரி எடமிருக்கு? இங்கதான். நடுராத்திரியிலே கெளம்பி நாளைக்கு விடிகாலையில வந்திருவாங்க. அதுக்குள்ள செய்ய வேண்டியத செய்யணும்.’என்றார்
நான் பேசாமலேயே அமர்ந்திருந்தேன்
‘என்ன?’
‘எஸ் சார்’
கருப்பையா நாராயணனிடம் ‘நீயும் கூட போடா…சீக்கிரம். இங்க அவனுக வந்து சேரறதுக்கு சாயங்காலமாயிடும். காலையிலே குழி ரெடியா இருக்கணும்’
நான் ‘எஸ் சர்’ என்றேன்.
‘நான் இங்கியே இருக்கேன். பெருமாள் உங்கிட்ட சரக்கு இருக்குல்ல?’
‘இருக்கு சார்’
‘பொறிகிறி வச்சு காட்டுகோளி காடை கௌதாரி எதுனா போடுவீங்களாடா?’
‘சிக்குறதில்ல சார். இங்க பறவைகளே கம்மி’
‘என்னத்த காடோ என்ன எளவோ. மசிரு, சஹாராபாலைவனம் கெட்ட கேடாட்டுல்லடா இருக்கு’
நானும் நாராயணனும் மண்வெட்டிகளை எடுத்துக்கொண்டோம். பெருமாள் பிகாக்ஸை. ’குடிக்கத் தண்ணிய எடுத்துக்குங்கடா’ என்றார் கருப்பையா.
நாங்கள் இருபக்கமும் முட்கள் நீட்டி நின்ற இடுங்கிய பாதை வழியாக நடந்தோம்.
‘டேய், இதென்ன கட்டப்பாறை மாதிரில்லடே இருக்கு தரை….பன்னண்டடி ஆழம் வேணும்னு சொல்றானே நம்மாளு?’ என்றார் கருப்பையா.
‘பன்னண்டடியா? என்னது கெணறா வெட்டச்சொல்லுதாரு?’ என்றான் பெருமாள்
‘இல்லடே…காடுல்ல…ஏதுனா நாயோ நரியோ வந்து இளுத்துப்போட்டுட்டா வம்பாப்போயிரும்…அதான்..’
‘இங்க பன்னிரண்டடி வெட்ட ஒரு வாரமாவும் சார்’
‘வெட்டுங்கடே..நானும் வேணுமானா நின்னு ஒரு பிடி பிடிக்கேன்…எளவு மேலே உள்ள தெய்வங்கள்லா சொல்லுது…தொப்பிபோட்டவன் மறுத்துபேசமுடியுமாடே?’
பாறை இல்லை என்று தெரிந்த இடத்தைத் தேர்வுசெய்தோம். பெருமாள் பிக்ஆக்ஸால் நீள்சதுர வடிவத்தில் அடையாளப்படுத்திக்கொண்டான்
‘ஆரம்பிங்கடா…’ என்றார் கருப்பையா. ‘உஸ்ஸ்’ என்று அங்கே ஒரு சிறிய பாறையில் அமர்ந்துகொண்டார். ‘தண்ணிய எடுடா’ தண்ணீரைக் குடித்து கொஞ்சத்தைத் தலையில் விட்டுக்கொண்டார்.
நாராயணன் பிகாக்ஸால் எடுத்து நிலத்தை ஒருமுறை தட்டிவிட்டு, விலா எலும்புகள் தோலுக்குள் அலையலையாக ஓட தலைக்குமேல் அதை தூக்கி சட்டென்று வெட்டினான். மிகச்சரியாக நாராயணன் வரைந்த செவ்வகத்தின் கிழக்குமூலைப்புள்ளியில் வெட்டு விழுந்தது.
நாராயணன் வெட்ட பெருமாள் மண்ணை அள்ளி கொட்டினான். பின்னர் பெருமாள் வெட்ட நாராயணன் மண்ணை அள்ளிக்கொட்டினான். நான் மண்ணை அள்ளிக் குவித்தேன்.
‘சரக்க எடுடா பெருமாளு’ என்றார் கருப்பையா. அவர் வெற்றுச் சாராயமாகவே குடிக்கக்கூடியவர். மூவரும் அமர்ந்துகொண்டோம். நான் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்குடித்தேன். நாராயணனும் பெருமாளும் வேண்டாம் என்றார்கள். .
முழங்காலளவு ஆழம் வந்தபோது இருட்டிவிட்டது. நான் அரிக்கேன் விளக்கைக் கொளுத்தி மரக்கிளையில் மாட்டினேன். காட்டுக்குள் இவவ்ளவு பறவைகள் இருக்கும் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. விளக்கொளி அவற்றை பயமுறுத்தியதனால் மரங்களுக்கு மேலே அவை கலைந்துகலைந்து எழுந்து அமர்ந்துகொண்டிருந்தன. புதர்களுக்குள் சரசரவென்று எவையோ சென்றன. பெருமாள் காகிதத்தில் சுருட்டிக் கொண்டுவந்திருந்த சப்பாத்திகளை எதுவும் தொட்டுக்கொள்ளாமல் சாப்பிட்டோம். நாராயணன் சென்று கொஞ்சம் புளியமரத்தளிர்களைப் பறித்துக்கொண்டுவந்து அவற்றை சப்பாத்தியுடன் சேர்த்து மென்று தின்றான். இருவரும் மீண்டும் கொஞ்சம் சாராயம் குடித்துக்கொண்டார்கள்.
இடுப்பளவுக்குமேல் மண் இறுகி இருந்தது. வெட்டு விழும்போது அந்தப்பகுதி முழுக்க மண்ணின் அதிர்வு பரவியது. இரவு ஏற ஏற நன்றாகவே குளிர் அடித்தது. நாராயணன் சென்று ஒரு காய்ந்த மரத்தைத் தூக்கி வந்து பிக்ஆக்ஸாலேயே உடைத்துப் போட்டுத் தீமூட்டினான். தீயருகே நாங்கள் சூழ்ந்து அமர்ந்து கொண்டோம். பெருமாள் டீத்தூளும் சீனியும் கொண்டுவந்திருந்தான். தகரக்கோப்பையைத் தீமேல் காட்டி நீரைக் கொதிக்கச்செய்து கறுப்புடீ போட்டு நாராயணன் பெருமாள் இருவரும் குடித்தார்கள்.நான் சாராயத்தை லேசாக சூடு படுத்திக் குடித்தேன்.
கருப்பையா படுத்துவிட்டிருந்தார். என் உடல் அந்தக்குளிரிலும் கொதித்து வியர்வை வழிந்தது. மூவரும் வாயாலும் மூக்காலும் மூச்சுவிட்டுக்கொண்டிருந்தோம். என் காதுகளும் கண்களும் கூட மூச்சை சீறுவதுபோல உணர்ந்தேன்
சற்று அமர்ந்து கொண்டேன். வானத்தில் நிறைய நட்சத்திரங்கள். நான் முழக்கோல் நட்சத்திரத்தை மட்டும் அடையாளம் கண்டேன். பொட்டலில் ஆடுமேய்க்கச்சென்று பட்டி அடித்துத் தங்கும்போது அப்பச்சி நிறைய நட்சத்திரங்களுக்குப் பெயர் சொல்லித் தந்திருக்கிறார். எல்லாம் மறந்து போய்விட்டது. ஆனால் வானம் வெள்ளாட்டுக் கூட்டங்கள் மேயும் ஒரு பெரிய பொட்டல் என்று நினைப்பது மட்டும் மனதில் தங்கிவிட்டது.
‘டேய் எந்திரி…. இந்தா நாலடி ஆகல்லை… வெள்ளிமீனு இப்ப வந்திரும்’
நள்ளிரவு தாண்டியபோது குழி ஆறடிக்குக் கீழே சென்றிருந்தது. நாராயணன் இரு மரக்கிளைகளை வெட்டிக் குறுக்கே குச்சிகள் வைத்துக் கட்டி ஏணி செய்திருந்தான். கூடைகளில் நாராயணன் வெட்டித் தூக்கி வந்து கொடுத்த மண்ணைப் பெருமாள் வாங்கிக் கொட்டினான். குளிரிலும் இருவரது வெற்று உடம்புகளும் வியர்வையில் பளபளத்தன. பேச்சே இல்லாமல் இருவரும் பேய்கள் போல வேலைசெய்துகொண்டிருந்தார்கள். நான் இன்னொரு பெரிய மரத்தடியைத் தூக்கி நெருப்பில் போட்டேன்.
சட்டென்று பெருமாள் தன் கையில் இருந்த கூடையை சுழற்றி வீசினான். ஓடிப்போய்அந்தக் கூடையை அழுத்திப்பிடித்துக்கொண்டான். ‘என்ன?’ என்றேன்.
‘முசல்’ கூடையை மெல்ல இரண்டு இஞ்சு தூக்கியபோது முயல் வெளியே பாயமுயன்று காதுகளை வெளியே விட அவன் அதன் காதைப்பற்றிக்கொண்டான்.
சாம்பல்நிறமான குண்டு முயல். கைக்குழந்தைபோல கைகால்களை வைத்துக்கொண்டு பஞ்சுபோல அடிவயிற்றுடன் நெருப்பு பிரதிபலித்த சிறியமணிக்கண்களுடன் பார்த்தது. வால் வெட் வெட் என ஆடியது. பெரிய முன்பற்கள் தெரிய அது முறுவலிப்பதுபோல தோன்றியது. பெருமாள் அதைக் காலால் மிதித்துப் பிடித்துக்கொண்டு கழுத்தை வேகமாக முறுக்கி முறித்தான். கால்கள் உதறிக்கொண்டபின் அடங்கியது. அவன் இடுப்பில் இருந்து கத்தியை எடுத்து அதன் வெண்ணிறமான வயிற்றை கிழித்து குடலை கையாலேயே பிய்த்து வெளியே பிடுங்கி புதரில் வீசினான். ஒரு குச்சியை எடுத்து அதில் அதை செருகி தீயில் காட்டி சுட ஆரம்பித்தான்.
நாராயணன் மேலே ஏறி வந்தான். சாராயப்புட்டியைக் கையோடு எடுத்துவந்தான். இருவருமாக அதை மிதமான சூட்டில் சுட்டார்கள். அதன் தோல் கருகி வழிந்து கொழுப்பு தீயில் சொட்டி தீ நீலமாக வெடித்தது. சூடான முயலை வெளியே எடுத்துக் கருகிய காதுகளையும் கால்களையும் பிய்த்து முறுமுறுவென அப்பளம் வற்றல் தின்பது போலத் தின்று புட்டியில் இருந்து சாராயத்தையும் குடித்துக்கொண்டார்கள்.
கடைசித்துளி சாராயத்தையும் குடித்துவிட்டு மீண்டும் வேலையை ஆரம்பித்தார்கள். நான் எத்தனையோ காலமாக, பிறந்ததில் இருந்தே அங்கே மண்ணை வாங்கிக்கொட்டிக்கொண்டிருப்பதுபோல உணர்ந்தேன். என் உடல் வியர்வையாக உருகிச் சொட்டிக் கொண்டிருந்தது. இருட்டுக்குள் யார்யாரோ என்னைப் பார்த்துக்கொண்டிருப்பதாகத் தோன்றியது.
எங்கள் நிழல்கள் சுற்றியிருந்த இருண்ட காட்டின் திரையில் பெரிய சினிமா போல ஆடிக்கொண்டிருந்தன. பூதங்கள் போல. நடுவே தீ தழல்விட்டது. சிலசமயம் எதையோ சொல்ல வருவது போல வெடித்தது. பின்னர் எரிந்து கனன்று சாம்பல் மூடி அணைந்தது. பூனைபோல உர்ர்ர் என்று ஒலித்துக்கொண்டிருந்தது. எவ்வளவுநேரம்,எவ்வளவு மண்!
மலையிறங்கி வந்த குளிர்காற்றில் கங்கு சிவந்து சீறித் தழல் எழுந்தது. மேலே நின்ற நாராயணன் என்னிடம் ’சோலி முடிஞ்சுது’ என்றான்.
நான் சென்று எட்டிப்பார்த்தேன். ‘எவ்ளவு ஆழம் வரும்டா?’
அவனைவிட நான்கு அடிக்கு மேல் ஆழம் இருந்தது
‘பத்தடி’ என்றான்.
‘பன்னிரண்டு அடிவேணும்ல?
‘இன்னும் தோண்டினா நீயும்நானும் இதிலே அடங்கிருவோம்…போதும்’
‘இல்ல…வந்து பாத்ததுமே வாயால பீய கக்க ஆரம்பிப்பானுக….வெட்டலாம்டா’
பெருமாள், ’ஒரு ரெண்டடிதானே…’ என்றான்
‘என்னடா பொழைப்பு இது…நாம யாரு? அடிமையா, வெட்டியானா?’
நான் ஒன்றும் சொல்லவில்லை. மூர்க்கமான வேகத்துடன் வெட்டிக்கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் நான் நினைவிழந்து மண்வெட்டியுடன் அப்படியே விழுந்துவிட்டேன். அவர்கள் இருவரும் உடனே அந்த வெட்டிப் போட்ட மண்ணிலேயே படுத்து உடனே தூங்கிவிட்டார்கள்.
நான் எழுந்தபோது தீ சிவந்த ஒற்றைக்கண் போல இமைத்துக்கொண்டிருந்தது. தீயைப் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தேன். தண்ணீர் குடித்தேன். எழுந்துசென்று சிறுநீர்கழிக்க அமர்ந்தபோது புதருக்குள் மெல்லிய பளபளப்புடன் அசைவைக் கண்டு எழுந்து நின்றேன். பாம்புதான். அந்த முயலின் குடலை விழுங்கிக்கொண்டிருந்தது. அதையே பார்த்தேன். உணவை மொத்த உடலாலும் வளைந்து நெளிந்து அது உள்ளே செலுத்தியது. பதற்றமா ருசியா என்று தெரியவில்லை, வால் நெளிநெளிந்தது. அது திரும்பிச் செல்லும்வரை அமர்ந்திருந்தேன்
கொஞ்சநேரத்தில் காற்று கீழிருந்து வர ஆரம்பித்தது. அப்போது குளிர் கொஞ்சம் குறைந்தது. வந்தகாற்றில் நீர் மணம் இருந்தது. ஒகேனேக்கல் அருவிகளின் ஓசை மெலிதாகக் கேட்டது. காற்று பலமாக வீசியபோது நன்றாகவே கேட்டது. காற்று நின்றதும் குளிர் கூடும் விந்தையை கவனித்தேன். கீழ்வானில் விடிவெள்ளி தெரிகிறதா என்று பார்த்தேன். கொஞ்சம் மேகம் இருக்கும்போல. தெரியவில்லை. காத்திருந்தேன். விடிவெள்ளி தெரிந்ததும் இன்னொரு கருப்பு டீ போட்டுக் குடித்தேன்.
‘டேய்,எந்திரிங்கடா…இன்னும் ஒரடி…டேய்’ என அவர்களை எழுப்பினேன்.
பெருமாள் செக்கச்சிவந்த கண்களால் என்னைப்பார்த்து ‘என்னடா?’ என்றான்
‘குழிடா…வா..’
‘என குழி?’
‘டேய் எந்திரிடா’ என்று ஓங்கி ஓர் உதை விட்டேன்
பெருமாள் குழியை அப்போதுதான் பார்த்தான். பதறி எழுந்து பிக்ஆக்ஸை எடுத்தான்.
மண் இப்போது சற்றே ஈரப்பசையுடன் , சுண்ணாம்பு மணத்துடன் இருந்தது. பெருமாள் ஒரு கல்லை எடுத்து வாயில்போட்டுக்கொண்டான்
‘என்னடா?’
‘கல்கண்டுக்கல்லுடா…குளிர்ச்சியா இருக்கும்…தேரைக்கல்லுண்ணு எங்கப்பா சொல்லுவாரு..’
பெருமாளின் சாதி தொம்பர்சாதி. தலைமுறை தலைமுறையாகக் கிணறுவெட்டுவதுதான் வேலை. இப்போது எவரும் கிணறுவெட்டுவதில்லை. கக்கூஸ்தான்.
வானத்தில் சிவப்புத்தீற்றல்கள் எழ ஆரம்பித்தன. எங்கள் கைகளில் தொடுஉணர்ச்சிகூட இல்லை.
‘பன்னிரண்டடி இருக்கும்டா’
’அரையடி கூட்டியே வெட்டிருவோம்டா…வம்பு எதுக்கு’
குழி தயாரானபோது நிழல்களே இல்லாத மெல்லிய காலைவெளிச்சத்தில் காடு துல்லியமாக இருந்தது. ஒவ்வொரு முள்நுனியையும் துல்லியமாகப் பார்த்துவிடலாம்போலிருந்தது. காற்று அங்கேயே சுற்றிச்சுற்றி வந்தது. சின்னக்குழந்தை விளையாடுவதுபோல.
நான் புதருக்குள் சென்று சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தபோது ஒயர்லெஸ்ஸில் ரீங்காரத்துடன் கருப்பையாவின் எண் அழைக்கப்படுவதைக் கேட்டேன். ‘பி த்ரீ பித்ரீ டிகெ டிகெ ஓவர். பி த்ரீ பித்ரீ டிகெ டிகெ ஓவர் கேக்குதா….பி த்ரீ பித்ரீ டிகெ டிகெ ஓவர் அய்யா பேசணும்கிறாங்க…சார். பி த்ரீ டிகே..சார்.. பி த்ரீ பித்ரீ டிகெ டிகெ ஓவர்’
நான் சென்று கருப்பையாவை எழுப்பினேன். அவர் ‘ப்போ ‘ என்று குழறித் திரும்பிப்படுத்தவர் நான் மீண்டும் உசுப்புவதற்குள் சட்டென்று எழுந்து அமர்ந்து ‘கால் வந்திருக்கா?’ என்றார்.
நான் வயர்லெஸைக் கொடுத்தேன்.
‘பி த்ரீ டிகெ ஸ்பீங்கிங்…ஓவர்…’ என்றார். ‘அய்யா’ என்றார் ‘ஆமாங்கய்யா எல்லாம் ரெடி…ஆமாங்கய்யா .காட்டுக்குள்ள. இல்லீங்கய்யா ….ஆமா . மூணுபேருங்கய்யா…ஆமாங்கய்யா.. ஆமாங்கய்யா’
எழுந்து ‘மூணு மணிக்கே கெளம்பிட்டாங்கடா…இன்னும் ஒன்னவரிலே வந்திருவாங்க…போயி கக்கூஸ் கிக்கூஸ் போயி பல்லக்கில்ல வெளக்கி ரெடியா இரு…..நாம டெண்டுக்கு போவம்’ என்றார்.
நான் பெருமாளையும் நாராயணனையும் எழுப்பினேன். பெருமாள் வழக்கம் போல எழுந்து ஒன்றும் பேசாமல் சிறுநீர் கழிக்கச்சென்றான்.
நானும் கருப்பையாவும் காட்டுக்குள் நடந்து கொஞ்சம் முட்கீறல்களுடன் டெண்டுக்கு வந்து சேர்ந்தோம். கருப்பையா உள்ளே சென்று ‘துண்டு, சோப்பு இருக்காடா?’ என்றார்.
‘இருக்கு சார்’ என்று எடுத்துக்கொடுத்தேன். கீழே ஓடைக்குச் சென்று மலம்கழித்துப் பல்தேய்த்தோம்.
கருப்பையா ‘அம்மா …’ என்று வீரிட்டபடியே இருந்தார். ‘டேய், மூலம் இல்லா போலீஸ்காரன் ஒளுங்கா வேலைசெய்யலேண்ணாக்கும் அர்த்தம் கேட்டியா?’ என்று அவர் சொல்வதுண்டு.
திருப்பி ஏறும்போது கருப்பையா பலமுறை நின்று மூச்சுவாங்கினார். அவரது எடையுடன் அவர் ஏறுவதே ஆச்சரியம்தான். நான் டீ போட்டுக்கொண்டிருந்தபோது வயர்லெஸ்ஸில் ஜீப் நெருங்கிவிட்ட செய்தி வந்தது.
நான் திடீரென்று ஒன்று தோன்றி மலைப்பாதையில் மேலே சென்றேன். இரு வளைவுகள் முன்னால் சென்று நின்றேன். செம்புழுதி பின்பக்கம் சுருண்டு எழ ஒரு ஜீப்பும் வேனும் வருவதைக் கண்டேன். தூரத்துக் காட்டுக்குள் அப்போதுதான் விடிய ஆரம்பித்திருந்தது. பனிமூட்டம் விலகவில்லை. வண்டிகள் பனியின் திரையில் இருந்து புதிதாக உருவாகி வருவது போல வந்தன.
வேனும் ஜீப்பும் முன்னால் சென்று முகாமை அணுகின. நான் பின்னால் ஓடினேன். சரிவிறங்கி அவை எட்டும் முன்னரே முகாமுக்கு முன் வந்துசேர்ந்தேன்,
ஜீப்பும் வேனும் வந்தன. அலையில் படகு போல வந்த ஜீப்பின் ஓரத்தில் டிஎஸ்பி அமர்ந்து சிரித்துக்கொண்டே என்னிடம் ‘என்னய்யா?’ என்றார்.
நான் புன்னகை செய்தேன். முகாமுக்கு முன்னால் ஜீப்பும் வேனும் நின்றன. கருப்பையாவும் பெருமாளும் ஓடிவந்தனர். நாராயணன் டீ போடுகிறான் என ஊகித்தேன்.
டிஎஸ்பி இறங்கிக் கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தார். ’என்ன கருப்பு எப்டி இருக்கே?’
‘நல்லா இருக்கேங்கய்யா’
‘மெலிஞ்சுபோய்ட்டியே’
கருப்பையா நெளிவது போல பாவனைசெய்து சிரித்தார்.
பின்னால் இறங்கி வந்த எஸ்ஐ கண்ணப்பன் ’நாலுவேளைக்கு மேலெ சோறு எறங்கலையாம்… வருத்தப்படுறார்’ என்றார்.
டிஎஸ்பி உரக்கச்சிரித்தபின் கருப்பையா சிரித்தமுகமாக இருக்கும்போதே சட்டென்று சீரியஸாகி ‘என்ன வேலை முடிஞ்சாச்சா?’ என்றார்.
‘முடிஞ்சாச்சு சர். ரெண்டுபேர் அங்க நிக்கிறாங்க’ என்றார் கருப்பையா சிரிப்பை அணைத்து.
’அப்ப அயிட்டத்த நேரா அங்கியே கொண்டு போயிருவோம். டைமில்ல. விடிஞ்சிரும் இப்ப’ என்றபின் கண்ணப்பனிடம் ‘எறக்குய்யா’ என்றார்.
நான் மனம் படபடக்க வேன் கதவைப் பார்த்தேன். டிஎஸ்பி கண்காட்டவும் ஜீப்டிரைவர் சாமிக்கண்ணு வேனுக்கு அருகே சென்று கதவைத் திறந்தார். சில கணங்கள் எனக்கு வெறும் உடலசைவுகள்தான் தெரிந்தன. இரு காக்கி உடைகள் வெளியே வந்தன. ஆயுதப்படைக் காவலர்கள். அவர்கள் உள்ளே இருக்கை நடுவே இரும்புத்தரையில் படுத்திருந்த ஒர் இளைஞனை சாக்குமூட்டையை இழுப்பது போல இழுத்து வெளியே போட்டார்கள். கீழே விழுந்ததும் அவன் முனகியபடி மெல்ல அசைந்து எழுந்து அமர்ந்து வேனின் திறந்த கதவைப் பிடித்துக்கொண்டான்.
கரிய இளைஞன். இன்னும் கனக்காத பூச்சு மீசை. அடர்த்தி குறைந்த மென்மையான தலைமயிர் நெற்றிமேல் விழுந்து கிடந்தது. மெலிந்த உடல். கழுத்திலும் மார்புக் கூட்டிலும் எலும்பு தெரிந்தது. இவனா என்று தோன்றியது. தருமபுரியில் ஏதாவது கல்லூரியில் பீஏ சரித்திரம் படிக்கிறான் என்று சொல்லியிருந்தால் நம்ப முடியும்.
‘எந்திரிடா’ என்று டிஎஸ்பி அவனை உதைத்தார். அவன் கதவைப் பிடித்துத் தள்ளாடி எழுந்து நின்றான். வெள்ளை வேட்டியும் வெள்ளைச் சட்டையும் அணிந்திருந்தான். அது முழுக்க ரத்தம் காய்ந்து கரிய விழுதுகளாகிப் படிந்திருந்தது. உதடுகள் உடைந்து வீங்கி ரத்தக்கட்டி போல தொங்கின. இடதுகாதுமடல் கிழிந்து பிளந்து நின்றது. அவன் கொஞ்சம் தள்ளாடியபின் மீண்டும் விழுந்துவிட்டான். கண்ரப்பைகள் வீங்கி நீலம்பாரித்திருக்க கண்களுக்குக் கீழே நீர்ப்பைகள் தொங்கின
டிஎஸ்பி ‘டேய், அவன் நடந்துக்கிட மாட்டான்…தூக்கச் சொல்லுங்க’ என்றார். ‘அந்த வேட்டிசட்டைய அவுத்துடுங்க..டிரெஸ் ஒண்ணும் வேண்டாம்… அப்றம் அது வேற எசகுபெசகா எவிடென்ஸ் ஆயிடப்போகுது’ .
இரு ஆயுதப்படைக்காரர்களும் அவனைக் கீழே புரட்டி அவன் சட்டையையும் வேட்டியையும் கழட்டினார்கள். உள்ளாடைகள் ஏதும் இல்லை. அவன் நிர்வாணமாக மண்ணில் கிடந்தான். உடம்பு முழுக்க வரிவரியாக அடிபட்டுக் கன்றிய, தோல்கிழிந்து குருதியுடன் உலர்ந்த வடுக்கள். இடைவெளியே இல்லாமல் கால் முதல் முகம் வரை அவை பரவியிருந்தன. உடலில் ஒரு சிறைக்கூண்டு படிந்ததுபோல. பத்து கைவிரல்களும் பத்து கால்விரல்களும் நுனிகளில் ரத்தத்துடன் சதைந்து வத்தல் மிளகாய்கள் போல இருந்தன.
‘டேய் அவனுக்குத் தண்ணியோ டீயோ வேணுமானா குடு’ என்றார் டிஎஸ்பி
நான் அவனிடம் குனிந்து ’தண்ணி?’ என்றேன்
அவன் தலையசைத்தான்
‘டீ சாப்புடுறியா?’
‘ம்’
நாராயணனிடம் நான் டீ கொடுக்கச் சொன்னேன். டிஎஸ்பியும் எஸ்ஐ கண்ணப்பனும் மூங்கிலால் செய்யப்பட்ட பெஞ்சில் அமர்ந்துகொண்டார்கள். கருப்பையா அருகே கைகட்டி நின்றார். டிஎஸ்பி கண்ணப்பனிடம் மெல்லிய குரலில் ஏதோ சொல்ல அவர் தன் தோல்பையில் இருந்து ஒரு நாட்டுத்துப்பாக்கியை வெளியே எடுத்தார். கோழியின் கழுத்தை முறிப்பதுபோல அதன் குழாயைப் பெயர்த்து உள்ளே குண்டைப் போட்டார். சிறிய குச்சியால் மெழுகுத்திரவத்தைத் தொட்டுக் குழாய்க்குள் பூசினார்.
நாராயணன் கண்ணாடி டம்ளர்களில் கருப்புடீயை ஊற்றி அவர்கள் இருவருக்கும் கொண்டு சென்று கொடுத்தான். இன்னொரு டம்ளரை பெருமாள் எடுத்துச்சென்று அவனுக்குக் கொடுத்தான். அவனுடைய மணிக்கட்டு வீங்கி குழந்தையின் கைகளைப்போலிருந்தது. விரல்கள் மரத்திருந்தன. டம்ளரை அவனால் வாங்க முடியவில்லை. பெருமாள் அவனே டம்ளரைப்பற்றி அவன் வாயில் வைத்தான். மெலிந்த கழுத்தில் நரம்புகள் அசைய அவன் டீயை ஆவலுடன் குடித்தான். அடிபட்டு வீங்கிய உதடுகளில் சூடான டீ பட்டபோது அவன் சற்று முனகியபடி தலைகுனிந்தான். கையில் டீயுடன் பெருமாள் காத்து நின்றான்.
அவன் டீயை முழுக்கக் குடித்துவிட்டு மெல்லிய புன்னகையுடன் பெருமாளிடம் ஏதோ சொன்னான். பெருமாள் ஏதோ புரியாத மந்திரம் கேட்டவன்போலத் தலையை அசைத்தான். அவ்வளவு அடிபட்டு சிதிலமடைந்திருந்தபோதிலும் அந்த முகத்தில் புன்னகை வர முடிந்தது ஆச்சரியம்தான் என நினைத்துக்கொண்டேன். நாராயணன் டிரைவருக்கும் ஆயுதப்படை போலீஸ்காரர்களுக்கும் டீ கொண்டு சென்று கொடுத்துவந்தான்.
‘அவனுகளுக்கு என்ன ஏது ஒண்ணும் தெரியவேண்டாம்…என்னடா?’ என்றார் கண்ணப்பன். நாராயணன் தலையசைத்தான்.
டிஎஸ்பி ”போலாம்டா’ என்றார்
நாராயணனும் கருப்பையாவும் சேர்ந்து அவன் இரு கைகளையும் சேர்த்துக் கட்டினார்கள். பின்னர் இரு கால்களையும் சேர்த்துக் கட்டினார்கள். டிஎஸ்பி என்னிடம் ’டெண்டு குச்சி ஒண்ணை எடுய்யா’ என்றார். நான் உள்ளே சென்று எடுத்துக்கொண்டு சென்று கொடுத்தேன் அவனைப் புரட்டிப்போட்டு அவன் கைகால்கள் நடுவே குச்சியை செலுத்தினார்கள். குச்சி அவன் விதைகளில் பட்டு அவன் அலறினான். அப்போதுதான் நான் விதைகளைப் பார்த்தேன், பலூன்போல வீங்கி ஒரு பெரிய கொட்டைத்தேங்காய் அளவுக்கு சிவந்தும் நீலமோடியும் இருந்தன.
அவனை பன்றியைத் தூக்குவது போல இருவர் தூக்கிக்கொண்டார்கள். நான் டிஎஸ்பியின் பெட்டியைத் தூக்கிக்கொண்டேன். நாங்கள் காட்டுக்குள் நடக்க ஆரம்பித்தோம்
ஒவ்வொரு அசைவுக்கும் அவன் வலியுடன் முனகினான். தலை அண்ணாந்தது போல தரை நோக்கி தொங்க மெலிந்த கழுத்தில் குரல்வளை புடைத்துத் தெரிந்தது. வாய் திறந்து கறைபடிந்த பெரிய பற்கள் தெரிந்தன. தருமபுரிக்குரிய ஃப்ளூரைட் பல்கறை.
நான் வழிகாட்டி முன்னால் சென்றேன். அவர்கள் எனக்குப்பின்னால் வந்தார்கள். புதர்களை வெட்டி வெட்டி வழியைப் பெரியதாக்கியபடியே போனேன். புதருக்குள் இருந்து ஏதோ சிறிய பறவை ரிவீட் என்றபடி அதிர்ச்சி அடைந்தது போல படபடவென சிறகடித்துக்கொண்டு எழுந்து காற்றில் சுற்றி இன்னொரு கிளைக்குச் சென்று அமர்ந்தது.நாங்கள் முன்னால் சென்றபோது இன்னொரு பறவை அதேபோல ரிவீட் என்று சொன்னபடி எங்கள் முன்னால் பறந்து வானில் தத்தளித்து சுழன்று கிளையில் சென்று அமர்ந்தது. மூன்றாவது முறை நான் உணர்ந்தேன், அந்தப் பறவையேதான். அது எங்களைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தது.
ஆச்சரியமாக இருந்தது. நான் காட்டுக்குள் தங்க ஆரம்பித்து ஒருவருடம் ஆகிறது. எட்டுமாதமாக இங்கேதான் இருக்கிறேன். ஆனால் எனக்குக் காட்டைபப்ற்றியும் பறவைகளைப்பற்றியும் எதுவுமே தெரியாது. பறவை அப்படி மனிதர்களைத் தொடர்ந்து வருமா என்ன? என் பிரமையா? இல்லை, உண்மையிலேயே அது சத்தம்போட்டு சிறகடித்து எங்களைப் பார்த்தபடி எங்களுக்கு முன்னால்சென்று மரங்களில் அமர்ந்துகொண்டு கூடவே வந்தது. என்னைத்தவிர எவரும் அதைக் கவனிக்கவில்லை
சிறிய குருவி. கைப்பிடி மயிரை எடுத்து உருளையாக சுற்றியது போல இருந்தது. சிறகுகளின் அடியிலும் வால் நுனியிலும் மட்டும் சாம்பல் நிறம். கண்களுக்கு மேலே இரு கோதுமைமணிகளை ஒட்டிவைத்தது போல பொன்னிறமான வட்டம். சிறகடித்து எழுவதும் திரும்பி அமர்வதும் சட்சட்டென்று துடிப்பாக இருந்தன. பறக்கும்போது அது டிர்ரீட் என்று சத்தம்போடுவது சிலசமயம் பின்னாலும் சிலசமயம் பக்கவாட்டிலும் கேட்பது போல இருந்தது. கூரிய குரல். கண்ணாடியில் கையை உரசுவது போல உடம்பைக் கூசவைக்கும் கூர்மை.
குழி வெட்டப்பட்ட இடத்தை அடைந்தபோது இருவரும் வியர்வை வழிய மூச்சிரைத்துக்கொண்டிருந்தார்கள். குழி சிவந்த பெரிய வாய் போல திறந்து காத்திருந்தது. விரிந்த உதடுகள் போல அள்ளிப்போடப்பட்ட மண்
குழியின் அருகே கொண்டு சென்று அவனைப்போட்டுக் கட்டுகளை அவிழ்த்தபோது நான் அந்த ரிவிட் என்ற குரலைக் கேட்டேன். கரியகுருவி அங்கே வந்துவிட்டிருந்தது. மரங்கள் தோறும் மாறி மாறி அமர்ந்துகொண்டு அது குரலெழுப்பியது.
இப்போது டிஎஸ்பி அதை கவனித்தார். ‘என்னடாது, அந்தக் குருவி பின்னாடியே வந்து சத்தம்போடுது?’ என்றார்.
‘காட்டுக் குருவிசார்…எதுனா பாத்தா பின்னாடி வந்திரும்’என்றான் பெருமாள்.
‘பத்திவிடு அத..சனியன், என்ன சத்தம்போடுது’
நான் கற்களைப் பொறுக்கி அதை எறிந்தேன். ஆனால் தன்னை எவரும் கல்லால் அடித்துவிடமுடியாது என்று அதற்குத் தெரிந்திருந்தது
அப்புவைத் தூக்கி அமரச்செய்தார்கள். ‘டேய் தண்ணி குடிக்கிறியாடா?’ என்றார் டிஎஸ்பி
‘ம்’; என்றான்.
நாராயணன் தண்ணீரை அவன் உதடுகளில் வைக்க வீங்கிய உதடுகளைக் குவிக்கமுடியாமல் நீர் கன்னங்களில் வழிந்தது. தொண்டை ஏறி இறங்கியது. நான் அப்போதுதான் அவனுடைய கண்களைப் பார்த்தேன். ஆள் மாறி வேறு யாரோ இளைஞனைக் கொண்டுவந்துவிட்டார்கள் என்று தோன்றியது. அத்தனை களங்கமற்ற கிராமியத்தனமான கண்கள். தருமபுரி பஸ்நிலையத்தைப் பார்த்தாலே பிரமித்துப் பார்க்கும் குழந்தைக் கண்கள்.
அவனால் நீரைப் பற்றி உறிஞ்சி உள்ளே அனுப்ப முடியவில்லை. வாயில் உணர்ச்சியே இருக்காதென்று பட்டது. நாராயணன் டம்ளரை அவன் பற்கள் நடுவே செலுத்தி நீரை நன்றாக உள்ளே விட்டான். அவன் குடிக்கும் ஒலி மட்டும் அந்த அமைதியில் அத்தனை துல்லியமாகக் கேட்டது. எனக்கு அந்த ஒலி குமட்டலெடுப்பது போல உடலை உலுக்கியது. பெருமாள் மிகவும் பின்னால் சென்று கருவேல மரத்தைப் பற்றியபடி நின்றிருந்தான். அவன் முகம் செத்த சவம்போல வெளிறிப்போயிருந்தது.
டிஎஸ்பி எரிச்சலுடன் ‘டேய் அந்த சனியனை தொரத்துங்கடா’ என்றார்.
‘போகமாட்டேங்குது சார்’ என்றேன்.
டிஎஸ்பி பெருமாளிடம் “டேய் , அங்க என்ன செய்றே? வா…’ என்றார்.
பெருமாளும் கருப்பையாவும் அவனை இழுத்துக்கொண்டு சென்று அந்தக் குழி அருகே போட்டார்கள். அவன் உடம்பு மிக மெலிந்து வயிறு கைப்பிடி அளவுதான் இருந்தது. முடியில்லாத மார்பில் இருந்து மெல்லிய ரோமப்படலம் அடிவயிற்றை நோக்கி இறங்கியது. இடுப்பில் ஒரு சிறிய சரடு கட்டியிருந்தான். ‘டேய் அந்த சரடை அறுத்திரு’ என்றார் டிஎஸ்பி.
நான் குனிந்து அதைப் பிடித்து இழுத்தேன். இரட்டைச்சரடு. அவன் ஆஆ என்று அலறினான். அவன் உடலில் ரத்தம் கன்றாத இடமே இல்லை. என் கையில் இருந்த சிறிய கத்தியால் அதை வெட்டி எடுத்தேன். அவன் என்னை நோக்கி மெல்லப் புன்னகைசெய்து ‘தாங்ஸ்’ என்றான். அந்தப் புன்னகையுடன் சேர்ந்து சிரித்த கண்கள் அவற்றில் இருந்த இளமையையும் கிராமியத்தன்மையையும் கைவிட்டுவிட்டு ஆழமாக மாறி ஒளிவிட்டன என்று எனக்கு பட்டது. அக்கண்களை சந்திப்பதை விலக்கி ,கைகள் நடுங்க நான் எழுந்துகொண்டேன்.
நிலைகொள்ளாமல் பறவை காற்றில் சிறகடித்துக்கொண்டே இருந்தது. அதன் சிறகோசை என் தோளுக்குப் பின்னால் மிக அருகே கேட்பது போலிருந்தது. அதன் குரல் கூழாங்கற்கள் போல என் முதுகில் விழுவதாக உணர்ந்தேன்.
‘என்னாச்சுடா?’ என்றார் டிஎஸ்பி.
’ஆச்சு சார்’ நாராயணன் மேலேறி வந்தான்.
‘போட்டிருடா கண்ணப்பா’
அப்பு இப்போது இலகுவாகியிருந்தான். அவன் கண்கள் ஒருகணம் என்னை நோக்கியபின் கண்ணப்பனை நோக்கின. கண்ணப்பன் அந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்து அப்புவைக் குறிபார்த்தார். துப்பாக்கியை தழைத்துப் பார்வையை விலக்கிய கண்ணப்பன் சுட முடியாது திரும்பிவிடுவார் என நான் நினைத்தேன். ஆனால் அவர் சட்டென்று அப்புவின் மார்பில் சுட்டார்.
அந்தக்குருவி படபடத்து மரக்கிளைகளில் உரசிப் பதறுவதை உணர்ந்தேன். அதன் மென்சிறகுகள் முட்களில் சிக்கிக்கொண்டனவா என நினைத்தேன்.
அப்புவின் உடல் இருமுறை எம்பியது. கைகால்கள் நான்குபக்கமும் பரபரத்தன. குதிகால்கள் மண்ணை உரசிப் பின்பு அடங்கின. கழுத்தில் மட்டும் ஒரு துடிப்பு கொஞ்சநேரம் இருந்தது. வாயோரம் கடைசியாக ஒருமுறை அதிர்ந்து இழுத்துக்கொள்ள அசைவின்மை காலில் இருந்து மெல்லிய படலமாக பரவி முகத்தை மூடியது
அவன் மார்பில் சற்றுப்பெரிய ஒரு குங்குமப்பொட்டு போல மிகச்சிறிய துளை. அதில் செங்குமிழி வெடித்துக் குருதி கொழுமையாக விலாவெலும்பில் வழிந்தது. ரத்தத்தின் எரியும் வீச்சம் எழுந்தது. குருவி எங்கள் தலைக்குமேல் குறுக்கும் நெடுக்குமாக வேகமாகப் பறந்தது. எங்கள் கண்களைக் குத்திவிடுமோ என்று பயம் வந்தது. நாராயணன் கூடையை எடுத்து அதை அடிக்க முயன்றான். அது பறந்தவேகத்திலேயே திசை திருப்பித் தப்பியது.
நானும் நாராயணனுமாக அப்புவின் உடலைப்புரட்டிக் குழிக்குஉள்ளே போட்டோம். உடம்பில் சூடு இருந்ததனால் அதை ஒரு சடலம் என்று எண்ண முடியவில்லை. சடலம் குழிக்குள் பொத்தென்று குப்புற விழுந்தது. அதன் கைகள் நம்பமுடியாத கோணத்தில் ஒடிந்து மடங்கின. அப்போதுகூட அவன் எழுந்துவிடுவான் என்ற எண்ணம் வந்தது
நாராயணன் மண்வெட்டியால் மண்ணை அள்ளி அள்ளிக்கொட்டினான். குழி நிரம்புவதை நான் பார்த்து நின்றேன். அவன் களைத்தபோது நான் மண்ணைத்தள்ளினேன். என் தலைக்குமேலே அந்த சிறியகுருவி சிறகடித்துக் கலைந்து சுற்றி வந்தது. தன் முட்டைகள் உள்ள கூடு கலைக்கப்படுவதைப் பார்த்தால்தான் குருவிகள் அப்படி தட்டழிந்து சுற்றிவரும். இருமுறை மிகவும் கீழே என்னை மோதுமளவுக்கு வந்தது. நிமிர்ந்து அதைக் கைவீசி விலக்கினேன்.
மண்ணால் குழியை மூடி சிறியமேடாக ஆக்கி அதை மிதித்து அழுத்தினேன். பின்னர் விளக்கில் இருந்த மண்ணெண்ணையை எடுத்தும் அந்த மண்ணில் தெளித்துப் பரப்பினேன். காட்டில் புதைப்பதன் பெரிய சிக்கலே மிருகங்கள் தோண்டி எடுத்துவிடும் என்பதுதான். செந்நாய்கள் பன்னிரண்டடி தூரம் செல்லாதுதான். ஆனாலும் மண்ணெண்ணை வாடை இருந்தால் இன்னும் கொஞ்சம் உறுதி.
ரைஃபிள்களையும் விளக்கையும் புட்டிகளையும் பிறபொருட்களையும் பொறுக்கிக்கொண்டோம்.
‘டேய் இன்னொருவாட்டி பாருங்க…இங்க ஒரு பொருள் இருக்ககூடாது’ என்றார் டிஎஸ்பி
திரும்பி நடக்கும்போது கருப்பையா என்னருகே துருத்தி போல மூச்சு இரைக்க நடந்து வந்தார். டிஎஸ்பி ஒரு சிகரெட் பற்றவைத்துக் கண்ணப்பனுக்கும் ஒன்று கொடுத்தார்.
கருப்பையா என்னிடம் ‘என்ன பொழைப்பு என்ன?’ என்றார் மெல்ல.
நான் ஒன்றும் சொல்லவில்லை.
‘கொன்னா பாவம் தின்னா தீரும்பாங்க. சரி, செயிலிலே தூக்கில போடுறவனுக்கு என்ன பாவம் வரப்போவுது?’ என்று மீண்டும் சொன்னார்.
அவர் என்ன சொல்ல வருகிறார் என்று தெரியவில்லை. எப்படியோ சமாதானப்படுத்திக்கொள்ள முயல்கிறார், அவரது மண்டைக்குள் சொற்கள் எழவில்லை என்று தோன்றியது
அந்தக் குருவி என்னைத் தொடர்ந்து வருவதை உணர்ந்தேன். வேறு வேறு மரங்களில் சிறகடித்து வந்து அமர்ந்தபடி ‘டிர்ர்ர்யூ’ என்று அது திரும்பத்திரும்பக் கூவிக்கொண்டிருந்தது. ஒரு மரத்தில் அமர்ந்தபின் அந்த எல்லையைத் தாண்டி வரவில்லை. அது வருகிறதா என திரும்பித்திரும்பிப் பார்த்தேன். வரவில்லை என்று தெரிந்ததும் ஆறுதல் ஏற்பட்டது
முகாமுக்கு வந்து சேர்ந்தோம். டிஎஸ்பி ’ அப்ப நாம கெளம்பிருவோம்டா… ’ என்றார்
கண்ணப்பன் “சார்’ என்றார்
கண்ணப்பனிடம் ‘தர்மபுரி வாறியா?’ என்றார்.
‘எஸ் சர்’
‘நம்ம வீட்டுக்கு வா. சாந்தி ஊரிலே இல்ல. ஸ்காட்ச் ரெண்டு வச்சிருக்கேன்’
‘வாறேன் சார்’
டிஎஸ்பி நாராயணனிடம் ‘டேய், ரிவெர்ட் ஆடர் வர்ர வரை இங்கே காம்ப் இருக்கும்… பாத்துக்கங்க…எல்லாம் வழக்கம்போல…’ என்றார்
‘எஸ் சார்’
டிஎஸ்பி முற்றத்துக்கு வந்தபோது சரிந்த கல் மீது அமர்ந்திருந்தஆயுதப்படைக் காவலர்கள் எழுந்து தொப்பிகளை வைத்துக்கொண்டனர். ஜீப்பில் டிஎஸ்பி ஏறிக்கொண்டார். கண்ணப்பன் பின்னால் ஏறியதும் ஜீப் கிளம்பியது. ஆயுதப்படைக்காவலர்கள் வேனில் ஏறிக்கொண்டு பின்னால் கதவை சாத்தினார்கள். ஜீப் அதிர்ந்து டப் டப் எனப் புகை விட்டது. துப்பாக்கிக்குண்டு வெடிப்பதுபோல
அந்தப் பறவையை நினைத்தேன். அதன் ஒலி கேட்கவில்லை. ஆனால் இப்போது அது ஏமாற்றத்தை அளித்தது.
கருப்பையா என்னிடம் ‘பாத்துக்கடே…வாறேன்’ என்று சொல்லி பைக்கைக் கிளப்பினார்.
அவை தூசுப்படலம் பின்னால் நீண்டு பறக்க புழுதிச்சாலையில் செல்வதை நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். விசித்திரமான மூன்று பறவைகள், நீண்ட செந்நிறமான இறகுவாலுடன் கூடியவை.
பின்பு திரும்பி வந்து பெஞ்சில் அமர்ந்தேன்
நாராயணன் ‘டீ போடவா?’ என்றான்
‘போடு’ என்றேன்
பெருமாள் ஒரு பீடியைப் பற்றவைத்தான்
‘பெருமாள்ட்ட அவன் என்ன சொல்லியிருக்கான் தெரியுமா?’நாராயணன் கேட்டான்.
‘ம்?’என்றேன்
பெருமாள் ‘ஒண்ணுமில்ல…என்னமோ சொன்னான்’ என்றான்
‘என்ன?’
‘என்னமோ … ’
‘சொல்லு’
‘இங்க வேல ரொம்ப கஷ்டம்தான் இல்ல தோழர்? -ன்னு கேட்டான்’
நான் ‘ஓ’ என்றேன் அர்த்தமில்லாமல்.
நாராயணன் ‘முட்டாப்பய’ என்று சொல்லி ஸ்டவ்வைப் பற்றவைத்தான். பெருமாள் பீடியை மிக ஆழமாக இழுத்தான். இதயம்வரை அந்தப் புகை செல்லவேண்டும் என விரும்புகிறவன்போல.
[முற்றும்]
Comments
Post a Comment